திருவொற்றியூரில் மாசிமாக விழா தோற்றமும் சிறப்பு:
சுமார் 200 (இருநூறு) வருடங்களுக்கு முன்பு தென்னகத்தின் மையகமாக தற்சமயம் சென்னை என்று அழைக்கப்படும் மண்ணடி முத்தியாலுப்பேட்டையில் சென்னியப்ப நாயக்கர் சிற்றுருர் ஜார்ஜ் டவுன் என்று கோட்டை கட்டி வெள்ளையர்கள் ஆட்சி செய்த காலத்தில் வியாபார சம்பதமாகவும் கப்பல் போக்குவரத்தை உத்தேசித்தும் நகரத்தாரும் சென்னை வந்து தொழில் செய்ய ஆரம்பித்தனர். அப்போது அவர்கள் செய்த தொழில் பழநி தண்டாயுதபாணியை நினைத்து அவர் பெயரும் வைத்த பணத்தில் வந்த லாபத்தில் இடங்கள் வாங்கி மண்ணடியில் கட்டிய விடுதிகளே தேவகோட்டையார் விடுதி என்ற புதுதெண்டாயுதபாணி விடுதியும் அதை சுவாமி வீடாக வழிபட்டு வந்தனர். வேலுக்கு நித்திய பூஜை செய்தனர். ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்ய வேண்டுமென விரும்பி வேல் எடுத்து பட்டினத்தார் முக்தி பெற்ற திருவெற்றியூரிலே சுந்தரமூர்த்தி நாயனாருக்கு கல்யாணம் நடந்த மாசிமாதம் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் மகிழடி சேவையன்று நம் திருவொற்றியூர் சத்திரத்தில் நகரத்தார்களால் பெரிய பூஜை நடத்தி அதற்கு முன்பு 3 நாட்கள் மேலும் மறுநாளுடன் சேர்ந்து 5 நாட்கள் பூஜை நடத்தி 5 நாட்களும் அன்னதானம் செய்தனர். இந்த அன்னதானம் செய்த இடம் முன்பு பனைமரத்துக் காடாக இருந்தது. பின்பு நம்மவர்களால் திருவொற்றியூர் நகர விடுதியாக கட்டப்பட்டது.
இப்படி மண்ணடியில் இருக்கும் பழைய தண்டாயுதபாணியும், புதுதெண்டாயுதபாணியும் தனித்தனி ரதங்களில் ஒன்றன்பின் ஒன்றாக திருவொற்றியூரில் நடக்கும் மாசிமாதம் மகிழடி சேவைக்கு சென்னை பாவலக்காரத் தெருவில் உள்ள பழைய மற்றும் புதியதண்டாயுதபாணி விடுதிகளில் இருந்து புறப்பட்டு திருவெற்றியுருக்கு வந்து திருவொற்றியூர் விடுதியில் 5 நாட்கள், பூஜை அன்னதானம் முடிந்து பின்பு திரும்ப சென்னைக்கு அதனதன் விடுதிகளுக்கு செல்லும். நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ராபர்ட் கிளைவ் காலத்தில் திருவொற்றியூரில் அன்னதானத்துக்காக பணத்தோப்பாக இருந்த இடம் கொடுக்கப்பட்டது. அந்த இடத்தில் சத்திரம் கட்டி சென்னையில் உள்ள மேற்சொன்ன இருவீட்டாரும் சேர்ந்து தீப அலங்காரத்துக்கு தண்டாயுதபாணிக்கு 120 வருடங்களுக்கு முன்பாக திருவொற்றியூரில் சத்திரமும் மண்டபமும் அமைத்தனர்.
மேற்சொன்ன இரண்டு தண்டாயுதபாணியும் மாசிமகம் முகிழடி சேவைக்கு 3 நாட்கள் முன்பு அதாவது மாசிமகம் 4ம் தேதி என்றால் முதல் தேதி சுவாமிகள் சென்னையில் இருந்து தனித்தனி ரதங்களில் பிள்ளையார் ரதம் முன் செல்ல புறப்பட்டு திருவொற்றியூர் வந்து இவ்விடம் 5 நாட்கள் பூஜை மற்றும் அன்னதானம் முடிந்து திரும்ப மாசி மகத்துக்கு மறுநாள் அதாவது 5ம் தேதி திரும்ப சென்று அதனதன் விடுதிகளில் சேரும். சுவாமி ரதங்களில் வரும் போது மேலவாத்தியங்கள் முழங்க அலங்கார கொடிகளுடன் பாண்டு வாத்தியங்கள் இசைக்க, தீவட்டிகள் முன்செல்ல மெய்யன்பர்களின், மெல்லிசை பக்திப் பாடல்கள் ஓங்காரத்துடன் ஓலிக்க மண்ணடியில் இருந்து புறப்பட்டு வரும் காட்சியும் எல்லா ஊர்களில் இருந்து நகரத்தார்களும், ஆச்சிமார்களும், குழந்தைகளும் கூட நடந்து வருவது பார்ப்பவர் கண்ணுக்கு பேரானந்தம் தரும் கண் கொள்ளாக்காட்சி.
சுவாமி வரும் போதும் போகும் போதும் மக்கள் அலைகடலென ரதத்துடன் நடந்து செல்வர். தேரில் பவனி வரும் பழைய மற்றும் புதிய தண்டாயுதபாணியின் அழகை காண கண் கோடி வேண்டும். வழியெங்கும் தோரணங்கள், பட்டு சாத்துவர், பூமாலை அணிவிப்போர், அர்ச்சனை செய்வோர் ஏராளம். சென்னை நகரவாசிகள் அனைவரும் நம் தண்டாயுதபாணியை நாட்டுகோட்டைச் சாமி என்று மிகவும் சிறப்பாக பயபக்தியுடன் வரவேட்பார்கள் வணங்கி மகிழ்வார்கள் சிதர் தேங்காய் உடைத்து வழி எங்கும் குவியல்களாய் வரவேட்பார்கள் நடந்து வரும் பக்தர்களுக்கு எல்லாம் நம் நகரத்தார்கள் அன்னதானம், ரொட்டி, மிட்டாய், சர்பத், டி, காபி போன்றவைகள் வழங்கி தண்டாயுதபாணியின் அருளை வேண்டி வழிபடுகின்றனர்.
திருவொற்றியூரில் சுவாமி சேர்ந்ததும் இரண்டு தண்டாயுதபாணிக்கும் ஓரே நேரத்தில் அலங்கார தீபங்கள் காட்டி பக்தர்கள் பாவிசைக்க மேளதாள வாத்தியங்களுடன் அலங்கார தீபம்காட்டி அன்னதானமும் செய்து வருகிறார்கள். மகப்பேறு வேண்டி பிராத்தனை செய்து கொண்டவர்கள் மகப்பேறு கிட்டியதும் கரும்புத் தொட்டில் கட்டி மகிழ்பவர்கள் ஏராளம். பழைய தண்டாயுதபாணி சுவாமியும், புதுத் தண்டாயுதபாணி சுவாமியும் திருவொற்றியூரில் 5 நாட்கள் தங்கி அன்பர்களுக்கு அருளுவது பெருந்திருவிழாவாக நடந்து வருகிறது. இந்த 5 நாட்களும் வேலுக்கு பூஜை செய்து அன்னதானம் நடைபெறும். மேற்கண்ட இரண்டு வீட்டாரும் சேர்ந்து இவைகளைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர். இந்த விழாவில் அனைத்து ஊர் நகரத்தார்களும் வந்து சிறப்பாக கலந்து கொண்டு இறைவனை வழிபாட்டு பேரானந்தம் அடைகின்றனர்.
இதை எழுதியது - தேவகோட்டை டிரஸ்ட்டி
AL SP PL சிதம்பரம் செட்டியார்